கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ எனும் ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல் காந்தியின் இந்த நடைப் பயணத்தை தேசியக் கொடி வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் பயணம் நிறைவடைந்த நிலையில் தற்போது கேரளத்தில் உள்ளார்.
13 ஆவது நாளான இன்று அவர், கேரளத்தில் ஆலப்புழாவில் நடைப் பயணம் மேற்கொண்டுள்ளார். செல்லும் வழியில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து வருகிறார்.
கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 15 கிமீ பயணம் மேற்கொள்கிறார்.
மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் 3,600 கி.மீ. நடைப்பயணம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.