வெளிநாட்டு வீரர்களின் நலனுக்கான கதவு மூடப்படுகின்றன
வெளிநாட்டுத் தூதுரகங்களின் செலவீனங்களை குறைக்கும் வகையில், இலங்கைக்கு உயர்மட்ட அந்நிய செலாவணி வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு பணியாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக செயற்படும் பிரிவுகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 14 நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களில் இயங்கும், குறித்த பிரிவுகளை மூடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களில் இயங்கும் அலுவலகங்களும் உள்ளடங்கும் என்பதோடு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீள அழைக்கப்படவுள்ளதாகவும் வார இறுதி ஆங்கில பத்திரிகையான சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல், தொழில் அமைச்சு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க செலவீனங்களைக் குறைப்பதற்கான உத்தரவுகளுக்கு அமைய தொழிலாளர் மற்றும் நலப் பிரிவுகள் மூடப்படும் என தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பதிரன தெரிவித்துள்ளார்.
“இந்த தொழிலாளர் பிரிவுகளை வெளிநாடுகளில் நடத்திச் செல்வது அரசாங்கத்திற்கு இலாபகரமானது அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் தேவைகளை ஆராய தொழிலாளர் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் இந்த தீர்மானம் பாதிப்பினை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளை எதிர்நோக்கும் தொழிலாளர்களுக்கான தங்குமிட பராமரிப்பு, தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்தல், காப்பீட்டுக் கோரிக்கைகளைப் பெறுதல் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக மரணம் அல்லது விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றுக்கு இந்தப் பிரிவு பொறுப்பாக காணப்படுகின்றது.
அதிகபட்ச அந்நிய செலாவணி
கடந்த வருடம் மாத்திரம் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் ஊடாக 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணியை ஈட்டிய போதிலும் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த வருமானமானது, ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமாகும்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் 160 தொழிலாளர் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளை அழைத்து, வெளிநாட்டு தொழிலாளர் அலுவலகங்களை மூடுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளதோடு, அரசாங்கம் வருடாந்தம் இதற்கென 900 மில்லியன் ரூபாயை செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், தொழில் அமைச்சர் இந்த தீர்மானத்தை அதிகாரிகளுக்கு அறிவித்த சந்தர்பத்தில், தொழில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது குறித்து அமைச்சு எங்களிடம் கேட்கவில்லை, ஆனால் இது அரசாங்கத்தின் தீர்மானம் என்றால், நாங்கள் அந்த உத்தரவுகளுக்குக் கட்டுப்படுவோம்” என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 203,000 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 150,000ற்கும் அதிகமானோர் சவுதி அரேபியா, கட்டார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் 75%ற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கிலேயே பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.