போராளிகளைக் கொச்சைப்படுத்துவோர் எங்கள் அமைப்பில் இருக்கவே முடியாது!
“கொள்கைக்காகப் பயணிக்கும் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அந்தப் போராளிகளுக்கான மதிப்பைக் கொடுக்கத் தயாரில்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது.”
இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் குறித்து ஊடகங்கள் வினவியபோதே கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது தேச விடுதலைக்காகப் போராடிய போராளிகளை நாம் முன்னாள் போராளிகள் எனக் கருதவில்லை. தமது கொள்கைக்காக நேர்மையாகப் பயணிக்கும் அவர்கள் போராளிகள்தான். அவர்கள் எம் பெருமதிப்புக்கு உரியவர்கள். அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது.
அந்தப் போராளிகளுக்கான மதிப்பைக் கொடுக்கத் தயாரில்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது.
போராளிகளைப் போற்றுவதும், மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த அவர்களைப் பராமரிப்பதும் எமது தேசத்தின் தலையாய கடமை என்றே நான் கருதுகின்றேன்.
ஆனால், எத்தனையோ உயிர் அர்ப்பணிப்புக்களால் கட்டியெழுப்பப்பட்ட எமது தேசத்தின் கொள்கையைக் கைவிட்ட எவரும் தம்மை ‘முன்னாள் போராளி’ எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு மக்களைப் பிழையாக வழிநடத்த முடியாது. அப்படியாயின் கருணா கூட தன்னை முன்னாள் போராளி என அழைத்து அந்த அடையாளத்தைக் காட்டி எம்மைப் பிழையாக வழிநடத்த முடியும். அதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது” – என்றார்.