போலீசார் அலட்சியம்… கஞ்சா வழக்கில் கைதானவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவர், 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த பிப்ரவரி 13ம் தேதி திருவொற்றியூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், சட்டப்பூர்வ ஜாமீன் கோரி சுதர்சன் போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுதர்சன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தின்படி 6 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ரசாயன ஆய்வு அறிக்கை வரவில்லை என்ற காரணத்தை கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், தனக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க சுதர்சன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
காவல்துறை தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரி தேர்தல் பணிக்கு சென்றுவிட்டதாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும் கஞ்சா மாதிரியை ரசாயன ஆய்வுக்கு அனுப்ப தாமதமாகிவிட்டது என்று வாதிடப்பட்டது.
பறிமுதல் செய்த கஞ்சாவை உடனடியாக ரசாயன ஆய்வுக்கு அனுப்பியிருந்தால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்க முடியும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின் ரசாயன ஆய்வுக்கு அனுப்பியதற்கு சரியான காரணங்கள் தெரிவிக்காத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம், அவகாசம் வழங்கியதை ஏற்க முடியாது எனக் கூறி சுதாகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.