மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுவர ஆகும் செலவை அரசே ஏற்கும் -அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவு அரசே ஏற்கும் என சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மியான்மருக்கு ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு வேலைக்காக சென்ற இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த முயல்வதாகவும் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 300 பேரில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறித்து வைத்துக் கொண்டு சித்ரவதை செய்வதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார், அதில் மியான்மரின் மியவாடி என்ற பகுதில் சிறை வைத்து இளைஞர்களை சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது என்றும் ஹேக்கிங் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, மேலும் அங்கே சிக்கியுள்ள தமிழர்களில் 17 பேர் அரசின் தொடர்பில் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுடன் தொடர்பில் உள்ள தமிழர்கள் பற்றிய விவரங்களையும் அவர்கள் சிக்கி உள்ள இடங்கள் குறித்தும் மத்திய அரசுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளதாகவும் தூதரக நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்கள் தாயகம் திரும்ப அதற்கான அனைத்து விதமான செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.