பாலியல் வன்கொடுமை செய்தவரை வீட்டில் வைத்து பூட்டிய பெண் – டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர் கைது
டெல்லியில் அரசியல் பிரமுகரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண், அவரை சாமர்த்தியமாக பிடித்து வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மஹ்ரவுலி பகுதியை சேர்ந்த 30 பெண் விமானப் பணிப்பெண்ணாக (ஏர் ஹோஸ்டஸ்) வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்த பிளாக் தலைவர் ஹர்ஜீத் யாதவ் என்பவர் 50 நாள்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ளார். இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ள நிலையில்,கடந்த திங்கள்கிழமை அன்று பெண்ணின் வீட்டிற்குள் அரசியல் பிரமுகர் ஹர்ஜீத் யாதவ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். குடிபோதையில் இருந்த ஹர்ஜீத் பெண்ணிடம் அத்துமீறி பலவந்தமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
கொடுமைக்கு ஆளான பெண் சமயம் பார்த்து சுதாரித்து, ஹர்ஜித் யாதவை வீட்டுக்குள்ளே வைத்து பூட்டி அவர் வெளியேறி காவல்துறை அவசர எண்ணான 112க்கு கால் செய்துள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை ஹர்ஜித்தை கைது செய்தது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சட்டப்பிரிவு 376, 323, 509, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் பிரமுகர் ஹர்ஜித் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளியை காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்துள்ள நிலையில் அவரது மன உறுதியை பலரும் பாராட்டியுள்ளனர்.