உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிக்கை ரத்தாகலாம்?
கொழும்பில் உள்ள பல விசேட இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான வர்த்தமானியை அண்மையில் வெளியிட்டார்.
ஆனால் இந்த வர்த்தமானி மூலம் கொழும்பின் மத்திய பொருளாதார வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நீண்ட விளக்கமளித்துள்ளனர்.
இந்த உயர்பாதுகாப்பு வலயங்களை நியமிப்பதன் மூலம் வேறு பிரச்சினைகள் எழக்கூடும் என்றும் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி அதற்கு பதிலாக புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட வேண்டும் என்பதால், ஜனாதிபதி ஜப்பான் விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய பின்னர் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.