கூட்டமைப்பிற்குள் பிரிவு ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு பயணிக்கும் : சி.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரிவு ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு பயணிக்கும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 15 ஆம் திகதி அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல நாளைய தினம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
பல ஊடகங்களில் நாளை கூட்டத்தில் பிரளயங்கள் , குளறுபடிகள் இடம்பெறும் முரண்பாடுகள் ஏற்படும் என சொல்கிறார்கள் அப்படி ஒன்றும்நடக்க வாய்ப்பில்லை சில விடயங்கள் நாங்கள் பேசப் போகின்றோம் பேசுவோம்.
அதாவது தமிழரசுக்கட்சி கூட்டமைப்பினுடைய ஒரு பங்காளி கட்சி முதன்மையான கட்சியும் கூட ஏனைய கட்சிகளை அரவணைத்து அவர்களோடு கலந்து பேசி கருத்துப் பகிர்வுடன் செயற்படவேண்டிய தேவை எங்களுக்குள்ளது அந்த பொறுப்பும் இருக்கின்றது.
ஆகவே அந்த பொறுப்போடு தான் தமிழரசுக்கட்சி செயற்படும் என்னை பொருத்தவரைக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சிலகருத்து முரண்பாடுகள் இருக்கின்றன ஆனால் கூட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லை.
ஆனால் அவர்களுடைய குறைபாடுகளை கருத்துக்களை நாங்கள் அனுசரித்து பேசி தீர்க்க கூடிய வழி வகைகள் இருக்கின்றன அது பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் செய்து கொள்வோம்.
எனவே எங்களுடைய மத்திய செயற்குழுவாக இருந்தாலும் சரி எந்த எந்த குழுவாக இருந்தாலும் அது இணக்கப்பாட்டை நோக்கமாக கொண்டு இருக்குமே தவிர பிளவுகளை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டமாக இருக்காது அவ்வாறான செயற்பாடுகளையே எங்களுடைய தமிழரசு கட்சியின் எதிர்பார்ப்பாகும் தொடர்ந்து எமது கட்சி ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடன் நட்புறவோடும் உரிமையோடும் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.