பக்தர்கள் சென்ற டிராக்டர் குளத்தில் விழுந்து 26 பேர் பலி : யாத்திரைக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் யாத்திரைக்கு வந்த பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர்-ட்ராலி குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 26 யாத்திரிகர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கான்பூரின் கதம்பூர் பகுதியில் இருந்து 50 யாத்திரிகர்கள் டிராக்டர்-ட்ராலியில் ஏறி பயணம் செய்தனர்.
இவர்கள் நேற்று கோயிலில் இருந்து திரும்பி வந்த கொண்டிருந்த போது, கான்பூரின் பாஹாதுனா கிராமத்தின் அருகே உள்ள குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு, மீதமுள்ள நபர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில், கான்பூர் டிராக்டர் விபத்து சம்பவம் கேட்டு மிகவும் துயருற்றேன். உள்ளூர் நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்த ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குகவும், காயமடைந்தவர்களுக்கும் ரூ.50,000 நிதியுதவி வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றார்.
அதேபோல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், டிராக்டரை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என கடுமையான உத்தரவிட்டுள்ளார்.