பேட்டரி தீர்ந்ததால் மங்கள்யான் செயற்கைகோளின் இயக்கம் முடிவுக்கு வந்தது..
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் மைல்கல் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுவது மங்கள்யான் திட்டம்.செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் திட்டமே மங்கள்யான் திட்டமாகும்.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MOM) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் நவம்பர் 5, 2013 இல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நிலை கொள்ள விண்ணில் ஏவப்பட்டது.இது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது. தொடர்ந்து செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
சுமார் ரூ.450 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் செயற்கைக்கோள் தனது இலக்கான எட்டு ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. திட்டமிடப்பட்ட 8 ஆண்டுகளைத் தாண்டி கூடுதலாக 6 மாதம் இந்த செயற்கைகோள் இயங்கியுள்ளது. இந்நிலையில், மங்கள்யான் செயற்கைக்கோளின் எரிபொருள் மற்றும் பேட்டரி தற்போது தீர்ந்துவிட்டது. எனவே, தனது திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றிய மங்கள்யான் செயற்கைக்கோள் தற்போது தொடர்ப்பை இழந்து பயணத்தை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டம் எதிர்பார்த்தை விட கூடுதலாகவே செயலாற்றி வேண்டிய அறிவியல் முடிவுகளை தந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட மங்கள்யான் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பிலும் இஸ்ரோ உள்ளது.
2016ஆம் ஆண்டில் இரண்டாவது மார்ஸ் ஆர்பிட் திட்டத்திற்கு (MOM-2) ‘வாய்ப்பு அறிவிப்பை’ (AO) இஸ்ரோ வெளியிட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் காகித அளவிலேயே இருக்கின்றன. ‘ககன்யான்’, ‘சந்திராயன்-3’ மற்றும் சூரியனை ஆராயும் ‘ஆதித்யா – L1’ போன்ற திட்டங்கள் இஸ்ரோவின் தற்போதைய முன்னுரிமை பட்டியலில் உள்ளது.எனவே, இவற்றை முடித்த பின்னர்தான் MOM 2 திட்டத்திற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கான பயணம் மற்றும் அதன் ஆராய்ச்சி என்பதில் உலக நாடுகள் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தை கொண்டு சேர்ப்பேன் என்று ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உறுதியுடன் கூறிவருகிறார். ஆனால் அதற்குள்ளாகவே மனிதன் 7,000 கழிவுகளை செவ்வாய்க்கு கொண்டு சேர்த்துவிட்டான் என்கிறார் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சமீபத்தில் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.