கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க.. அரசு மருத்துவரை பணியிட மாற்றம் செய்ய சொன்ன அமைச்சர் துரைமுருகன்..
வேலூர் பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன் மருத்துவர் ஒருவரை பணியிட மாற்றம் செய்ய சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.
வேலூர் காட்பாடியில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது பாம்புக்கடிக்கான மருந்துகள் இல்லை எனவும் மருத்துவர்கள் அடிக்கடி பணியில் இருப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட 2 மருத்துவர்களை, பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன், மருத்துவரை பார்த்து, “எந்த ஊருமா நீ? என கேட்டார். மேலும், மருத்துவரை, ‘ கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க” என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கூறினார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், வேலூர் மாவட்டம் பொன்னை அரசு மருத்துவமனையில் சரியான முறையில் பணியில் கவனம் செலுத்தாத வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, பிரதீப் குமார் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொன்னை அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவும் புதிய கட்டிடங்களை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.