முரண்பாடுகளை மறந்து சகலரும் ஒன்றுபடுங்கள்! – ஜனாதிபதி ரணில் மீண்டும் அழைப்பு.
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளது எனவும், இரண்டாவது கட்டத்துக்கான அடித்தளம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜப்பான் – பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.
கடன் வழங்கியுள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குநர்களுடனும் நடத்தப்படும் பேச்சுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி, கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் எனவும் இங்கு குறிப்பிட்டார்.
அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும், தென்கிழக்காசியாவுடனான நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
விவசாயத்துறை தொடர்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களால் கடந்த போகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அறுவடையைப் பெற முடிந்தது எனவும், அடுத்த பெரும் போகத்தை எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக மேற்கொள்வதற்குத் தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் என்பன தயார்ப்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விளக்கினார்.