அடக்குமுறைகள் மூலம் போராட்டக்காரர்களின் குரல்களை ஒருபோதும் நசுக்க முடியாது!
“அடக்குமுறைகள் மூலம் போராட்டக்காரர்களின் குரல்களை ஒருபோதும் நசுக்க முடியாது. இந்த அடக்குமுறைகள் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை மேலும் எழுச்சி பெற வைக்கும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போராட்டக்காரர்கள் மீதான அரச படைகளின் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதன் விபரீதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்ந்துகொள்வார்.
அரச படைகளையும் தமது அடிவருடிகளையும் மக்கள் மீது ஏவிவிட்டு ஆட்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று கனவு கண்ட ராஜபக்சக்களுக்கு இறுதியில் மக்களிடமிருந்து என்ன தண்டனை கிடைத்தது என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் மறக்கவேமாட்டார்.
அமைதி வழியில் போராடும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினர் மீது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வலிந்து தாக்குதல்களை நடத்துகின்றனர்.
அவசியமில்லாத நேரங்களில்கூட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் போராட்டக்காரர்கள் மீது வீசப்படுகின்றன; நீர்த்தாரைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிதான் இதற்கு முழுப் பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.