பேசும் விடையங்களில் அவதானமாகவே இருக்கிறோம் – பொன்சேகோவிற்கு கஜேந்திரகுமார் பதிலடி
பேசும் விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறோம். இனவாதியாக இருக்கக்கூடிய நபர்களிடம் இருந்தே கடுமையான வார்த்தைகள் வெளி வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்பிக்கு பதிலளித்துள்ளார்.
சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்ட சிலர் கடந்த காலத்தில் எதிர்கொண்ட விளைவுகளை சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சரத்பொன்சேகா நாடாளுமன்றில் நேற்று (28) உரையாற்றியமை குறித்தே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும்,
“சபை அமர்வில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எனது பெயரைக் குறிப்பிட்டமை தொடர்பாக கருத்துக்கூற விரும்புகிறேன். அவர், நான் பேசிய விடயங்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எனக்கு சில அறிவுரைகளை வழங்கியதுடன், அதனூடாகவே இன நல்லிணக்கம் பேணப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் பேசிய விடயங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாகவே இருக்கிறேன் என்பதை அவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் குறிப்பிட்ட விடயங்களின் அளவீடுகள் தொடர்பாக நான் பிரக்ஞையுடன் இருக்கிறேன். குறிப்பாக இவர் என்னை காரணப்படுத்துவதை நான் விசேடமாக அவதானித்தேன், என்றார்.