சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் தீப்பிடித்தது… 11 பேர் பலி- அதிகாலையில் நடந்த சோகம்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் யவத்மால் பகுதியில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து நாசிக்கின் நந்துர்நாகா பகுதி அருகே தீப்பிடித்துள்ளது. அதிகாலை 5.30 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் சுமார் 50 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீக்காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாசிக்கின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்து என்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பேருந்தில் மீது எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி மோதியதே தீ விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை தர அரசு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் ஸ்லீப்பர் கோச்சில் பயணித்தவர்களே என நாசிக் டிசிபி அமோல் தாம்பே கூறியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடக்கன் சேரியில் நள்ளிரவு 12 மணியளவில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து, கேரள அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இரு நாள்களிலேயே மேலும் ஒரு கோர பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.