சர்வதேசத்தைப் பகைத்தால் நாடு மீண்டெழவே முடியாது! – அரசிடம் மைத்திரி இடித்துரைப்பு.

“சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஒருபோதும் மீண்டெழ முடியாது. ஆகவே, வெளிவிவகாரக் கொள்கையைத் திருத்தம் செய்வது மிகவும் அவசியம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஊழல், மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு இலங்கையைச் சர்வதேச நாடுகள் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது.

2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும், நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். நல்லாட்சி அரசு சர்தேசத்தின் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றது.

கடந்த இரண்டரை வருட காலத்துக்குள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதாரப் பாதிப்புக்கான காரணத்தை சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

‘இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் ஐ.நா.வின் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன், 20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நட்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானம் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.