கைதுகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோருகிறது! (Videos)
ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தை பொலிஸார் கலைத்த விதம் மற்றும் காரணம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயமாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
எதன் அடிப்படையில் போராட்டம் காவல்துறையினரால் கலைக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ரோஹினி மாரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் அரகலய சமயத்தில் உயிரிழந்த மாவீரர்களை கொண்டாடும் நிகழ்வுக்கு பொலிஸார் தலையிட்டமை தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார நெருக்கடியால் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட 6 மாத காலப் போராட்டத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் இந்த மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஆரம்பம் முதலே காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.
அமைதியான முறையில் போராட்டம் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான பொது மக்களின் உரிமையை மீறுவதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுடன் தாய்மார்களைப் போலவே தந்தையர்களையும் கைது செய்து இழுத்துச் செல்ல போலீசார் முயற்சிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ஜனவிரு நினைவேந்தலில் கலந்து கொண்ட 5 பேர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
16 வயது மாணவர் நேற்று இரவே விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரையும் தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டார்.