பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 42 மாணவர்களுக்குத் திடீர் சுகயீனம்!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

தரம் 6 முதல் 11 வகுப்பு வரையான 13 மாணவர்களும், 29 மாணவிகளுமே மயக்கம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவர்களில் சிலர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் எனவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் கொட்டகலை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை எனவும் வைத்தியர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு நேற்றும் குறித்த நோய் அறிகுறிகள் தென்பட்டன எனவும், அவர்கள் நேற்று மாலை கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர் எனவும் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.