கர்நாடகாவில் அனைத்து பதவிகளும் விற்கப்படுகின்றன.. ராகுல்காந்தி விமர்சனம்..!
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவி முதல் அனைத்துப் பதவிகளும் விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு தழுவிய அளவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், தற்போது கர்நாடகாவில் பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஹிரியூர் பகுதியில் நடைபெற்ற யாத்திரைக்குப் பிறகு பொதுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் மிகுந்த அரசாக கர்நாடக அரசு திகழ்வதாக தெரிவித்தார். ஒவ்வொரு அனுமதிக்கும் 40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக அவர் கூறினார். முதலமைச்சர் பதவியை 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் என்று பாஜக எம்எல்ஏ-வே கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல, உதவி ஆய்வாளர் பதவி 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், உதவி பேராசிரியர், பொறியாளர் பணி என அனைத்தும் விற்கப்படுவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார். இந்தியாவை பிளவுபடுத்த முடியாது என்று பாஜகவுக்கு தெளிவான செய்தியை அளிக்கும் வகையில் ஒற்றுமை யாத்திரை திகழ்வதாக ராகுல் காந்தி கூறினார்.