பிணைமுறி பிரதிவாதிகள் 10 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் உள்ளிட்ட முதலாவது பிணை முறி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுச்சொத்துகள் சட்டத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டை முன்கொண்டு செல்ல முடியாதென, கொழும்பு விசேட மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய,குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அர்ஜுன் மஹேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் 10 பேரையும் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் (11) சமத் மொராயஸ், தமித் தொட்டவத்த, நாமல் பலல்லே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்ப்பின் பிரகாரம் நீதிபதிகள் குழாம் இவ்வுத்தரவை வழங்கியது.
இந்த வழக்கில் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனமும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், பௌதீக நிறுவனமாக இல்லாத நிறுவனத்திற்கு எதிராக பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்டப்பூர்வ இயலுமை இல்லை எனவும் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
இந்த அடிப்படை ஆட்சேபனை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, ஏனைய பிரதிவாதிகளில் பெரும்பான்மையானவர்கள் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இருப்பதனால் அவர்களுக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என பிரதிவாதி தர்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை தவிர்த்து ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணையை டிசம்பர் 16 ஆம் திகதி முன்னெடுக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
கடந்த 2015 பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு ரூ. 688 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளாக லக்ஷ்மன் அர்ஜூன் மஹேந்திரன், பத்தினிகே சமரசிறி, பேர்பச்சுவர் ட்ரசரீஸ் நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், புஷ்ப சந்திர குணவர்தன, சித்த ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.