தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்குள் சுருண்டது.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக முன்னேறியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 10 ரன்களில் வெளியேறினார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷூப்மான் கில், 49 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளம் அமைத்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 28 ரன்களும், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களும் எடுக்க, 19.1 ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டியது.
19வது ஓவரின் முதல் பந்தில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்த இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.