முடியாட்சி தருவதாகச் சொன்னாலும் ராஜபக்சக்களுடன் சேரவேமாட்டேன்! – சஜித் உறுதி.
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளுக்காக, சலுகைகளுக்காக எந்தக் கொள்கைகளையும் காட்டிக்கொடுக்கமாட்டேன். முடியாட்சி தருவதாகச் சொன்னாலும் ராஜபக்சக்களுடன் சேர்ந்து நாட்டையோ, 220 இலட்சம் மக்களையோ, கட்சியையோ காட்டிக்கொடுக்கமாட்டேன்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தெஹியத்தகண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்காவின் ருவாண்டாவில் நடந்த பாரியதொரு பழங்குடிப் போர் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்கள் பலியாகினாலும் இன்று ருவாண்டா ஆபிரிக்காவின் புதிய சிங்கப்பூர் என்று அழைக்கப்படுகின்றது.
அது இலங்கையில் போரில் இழந்த உயிர்களை விட பெரிய தொகையாகும். அவர்கள் அபிவிருத்தியில் நாளுக்கு நாள் முன்னேறி வந்தாலும், எமது நாட்டில் போர் நிறைவடைந்து ஏறக்குறைய 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் நாட்டை அழிக்கும் திட்டத்துக்கு ராஜபக்ச குடும்பம் நாட்டை இட்டுச் சென்றது.
அவ்வாறு வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாமல் நாட்டைக் கட்டியெழுப்பும் குழுவொன்றுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரலாறு நெடுக தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்த நம் நாட்டு மக்களும் முன்னின்ற நாடும், மொட்டு அரசாலும் ராஜபக்ச குடும்பத்தாலும் வங்குரோத்தடையச் செய்யப்பட்டதாக அரசியல் வரலாற்றில் எழுதப்படும்.
தற்போது,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக்சர்கள் கைப்பாவையாக பாவித்து தமக்கு நெருக்கமாகவிருக்கும் நபர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி வருகின்றனர்.
விவசாயிகள், மீனவர்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் எனச் சகலரையும் அவர்கள் சிரமத்துக்குள்ளாக்கினர்.
அமெரிக்கவின் செனட் சபையில் இது குறித்து அறிக்கை கூடத் தயாரிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட நமது நாட்டில் பொருளாதார உரிமைகள் அழிக்கப்படுவது குறித்து விவாதிக்கின்றது.
சமூகத்தின் மிகச்சிறிய அலகிலுள்ள தனிமனிதன் முதல் தொழில் வல்லுநர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைவரினதும் பொருளாதாரத்தையும் ராஜபக்சர்கள் அழித்தனர். இதன் காரணமாக, மக்களின் போதிய உணவு மற்றும் கல்விக்கான உரிமைகள் கூட மீறப்பட்டுள்ளன.
குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்தவாறு உரப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கின்றனர். ஒரு நிமிடமேனும் கூட விவசாயிகள், மீனவர்கள் அருகில் செல்லாது, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்கள் தமது சிறப்புரிமைகளை அதிகரித்து, மொட்டுக்கு அதிக அமைச்சுகளை வழங்கி தமது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர்.
இதுவரை எழு மூளைக் காகம் 38 இராஜாங்க அமைச்சர்களின் பெயர்களை வழங்கிய நிலையில், ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான மேலும் 12 அடிமைகளின் பெயர்களை அமைச்சுப் பதவிகளுக்காக முன்மொழியப்பட்டுள்ளன. இதனூடாக மீண்டும் ஆட்சியைப் பெற முயற்சித்தாலும் மக்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே இருக்கின்றனர்.
அமைச்சர்களின் பிள்ளைகள் கற்கும் அனைத்துப் பாடசாலைகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைத் திரைகள், ஆங்கிலக் கல்வி என்பன அடிப்படையாக இருந்தாலும், நாட்டின் பிற மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் இதுபோன்ற வசதிகள் குறைந்தபட்சமே உள்ளன.
இது எதிர்காலத்தில் தொழிற்சந்தையைக் கூட பெரிதும் பாதித்துள்ளது. நாட்டில் இவ்வாறான இடைவெளியை ஏற்படுத்தியிருந்தும் தேர்தலின் போது சிங்களவாதம், பௌத்தவாதம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நமது கல்வி முறையின் மூலம் உலகையே வெல்லக்கூடிய மாணவ தலைமுறையை உருவாக்க முடியும். அவர்களுக்குச் சமமான கல்வி வாய்ப்பு வழங்கப்பட்டால், தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்து உலகையே வெற்றிகொள்ள முடியும்” – என்றார்.