பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் ஹீரோயிசம்..! சினிமாவை ஒழித்தால் சரியாப்போகும் – கிருஷ்ணசாமி அதிரடி
தமிழ் சினிமாவால் தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீர்கெடுகிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் இருந்த மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பஸ் ஸ்டாபில் வைத்து தாலி கட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரையும், தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஒரு பதிவை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிறுவர்கள் அவர்களின் ஹீரோயிசத்தை காட்டும் விதமாக தாலி கட்டி கொண்டதாகவும், தமிழ் சினிமாவால் தான் தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீர்கெடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்துவிட்டதாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின் என நயன்தாராவையும் விமர்சித்துள்ளார். இதனால் சினிமாவை அடியோடு ஒழித்து கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.