ஹிஜாப் தடை வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு- பெரிய அமர்வுக்கு மாறும் விசாரணை
ஹிஜாப் ஆடைகளை அணிந்து வருவதற்கு தடை விதித்தது செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர். ஒற்றை நிலை எட்டப்படாத காரணத்தினால், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்திய தலைமை நீதிபதி மாற்ற உள்ளார்.
முன்னதாக, கல்வி நிறுவனங்களில் மாணவிகள் தங்கள் விருப்பத்தின் படி ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிரான தீர்ப்பில் பதிலளித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ” ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதவழக்கமென்பது என்பதற்கு சான்றுகள் இல்லை என்று கூறி தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுஷாந்த் துலியா முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த மாதம் வாத பிரதிவாதங்கள் முடிவுற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வாசிக்கப்பட்டது.
இரண்டு நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி ஹேமந்த் குப்தா தனது தீர்ப்பில், “விசாரணையின் போது 11 கேள்விகளின் வழியே ஹிஜாப் வழக்கை அணுகியிருநேதேன். கேள்விகளுக்கான பதில்கள் முறையாக விடைகள் அளிக்கப்பட்டு விட்டன. மேல்முறையீடு மனு நிராகரிக்கப்படுகிறது. ஹிஜாப் உடுத்திச் செல்வதற்கு மாநில அரசு விதித்துள்ள தடை செல்லும்” என்று தெரிவித்தார்.
சுஷாந்த் துலியா தனது தீர்ப்பில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதவழக்கத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி தேவையற்றது. கர்நாடகா உயர்நீதிமன்றம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டது.
ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்பது இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது. அனைத்துக்கும் மேலாக, பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான உகந்த சூழலை நாம் உருவாக்குகிறோமா? என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. கர்நாடக மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்டுகிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியுள்ளதால், பெரிய அமர்வுக்கு இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்ற உள்ளார்.