ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் பின்லாந்து.
“இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச இராஜதந்திர கவுன்சில் ஏற்பாட்டில் பின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள அவர் நேற்று பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பெக்கா காவிஸ்தோ உட்பட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்புப் பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்கப் பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர் தாயகத்தில் எமது மக்கள் படும் இன்னல்களையும், இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புகளையும் தெளிவாக அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.
தாயகத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பின்லாந்து அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை மேம்படுத்த பின்லாந்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது தெளிவான அழுத்தங்களைக் கொடுக்கும் என அவர்கள் எமக்கு இதன்போது தெரிவித்தனர்.
அத்துடன், மனித உரிமை மேம்பாட்டு விடயங்கள் சார்ந்து பணியாற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். அவர்களும் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு நீதி கோரி சந்திப்புக்களை நடத்தி வருகின்றார்கள்.
இந்தச் சந்திப்புக்களின் சர்வதேச இராஜதந்திர கவுன்சிலின் பின்லாந்து பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்” – என்றார்.