இந்து மதம் குறித்த பேச்சு: ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் தலைவர் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் ராசா மீதான புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை .

எனவே ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.