கொழும்பில் நவம்பர் 2 ஆம் திகதி ரணில் அரசை எதிர்த்துப் பெரும் போராட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது அரசின் அடக்குமுறைகள் தொடர்பில் அனைவரும் கருத்துக்களை முன்வைத்தனர்.
அமைதி வழியில் போராடுவோர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசி வலிந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தினர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்களைச் கொலை செய்ய அரசு சதித்திட்டம் தீட்டுகின்றது என்றும் மாணவர் அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.
அரசின் அடக்குமுறைகள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர் என்றும், போராட்டக் களத்தில் செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களைப் பொலிஸ் அதிகாரிகள் பகிரங்கமாக எச்சரிக்கின்றனர் என்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் ரணில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.