நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சதீஷை தாக்க வழக்கறிஞர்கள் முயற்சி… போலீசாருடன் கடும் வாக்குவாதம்
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துவந்தபோது, அவரை தாக்க வழக்கறிஞர்கள் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சத்யாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. சதீஷூம் அதே கல்லூரியில் படித்து வந்த நிலையில், நேற்று சத்யாவிடம் பேசுவதற்காக அவரை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் திடீரென சந்தியாவை அந்த வழியாக வந்த மின்சார ரயிலில் தள்ளியுள்ளார். இதில் மின்சார ரயிலில் மோதி பலத்த காயமடைந்த சந்தியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து பயந்துபோன சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நேற்று சத்யாவை கொலை செய்த நிலையில், இரவு முழுவதும் தலைமறைவாக இருந்த சதீஷ், இன்று அதிகாலை துரைப்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதன்பின்னர் சதீஷை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்டு வழக்கறிஞர்கள் சதீஷை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சதீஷின் முகத்தை மூடிக்கொண்டு போலீசார் அவரை கொண்டு சென்றனர். அப்போது அவர்களுடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்கள், ஒரு பெண்ணை கொலை செய்து, அவரது தந்தையை தற்கொலை செய்ய வைத்தவரை இவ்வளவு பாதுகாப்பாகவா அழைத்துச் செல்வது? மீடியாக்களுக்கு கொலைகாரனின் முகத்தை காட்டுங்கள் என்று கூறி சதீஷை தாக்க முற்பட்டனர்.
அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் சதீஷை பத்திரமாக கொண்டு சென்று நீதிபதி மோகனாம்பாள் முன்பு ஆஜர் படுத்தினர். அவரை இம்மாதம் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சதீஷை மீண்டும் பத்திரமாக கொண்டு சென்றனர்.