கேரள ஆளுநரின் முகநூல் ஹேக் செய்யப்பட்டது..!
அரசு ஊழியர்கள் , அரசியல் பிரமுகர்கள், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களின் சமூக வலைத்தளங்கள் அவ்வப்போது ஹேக்கர்களால் கையகப்படுத்தப்படும் செய்தியைக் கேட்டிருப்போம். அப்படி ஒரு நிலை தான் நம் அண்டை மாநில ஆளுநருக்கு இப்போது வந்துள்ளது.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஃபேஸ்புக் கணக்கு சனிக்கிழமை ஹேக் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஹேக்கிங் செய்யப்பட்டவுடன் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கவர்னர் ஆரிப் முகமது கான், “எனது முகநூல் பக்கம் இன்று காலை முதல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு, பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று ட்வீட் செய்துள்ளார்.
சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் சமூக ஊடக தளங்களில் புகார் அளித்து பல மணிநேரம் ஆகியும், கானின் கணக்கில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை. அரேபிய எழுத்துக்களில் உள்ள விளக்கங்களுடன் வன்பொருள் அல்லது கட்டுமானம் தொடர்பான வீடியோக்களைக் காட்டும் மூன்று இடுகைகள் அதில் உள்ளன. கணக்கை மீட்டெடுக்க நேரம் எடுக்கும் என்று ராஜ்பவனில் உள்ள ஒரு வட்டாரம் தெரிவித்தது.