சர்வதேச பட்டினி குறியீட்டில் அண்டை நாடுகளைக் காட்டிலும் மோசமான நிலையில் இந்தியா
உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 101-வது இடத்தில் இருந்து 107-வது இடத்திற்கு சரிந்துள்ளது. அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது.
அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் (Concern Worldwide ) மற்றும் ஜெர்மனியின் வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே (Welt Hunger Hilfe) அமைப்புகள் ஆண்டு தோறும் உலக பட்டினிக் குறியீட்டை வெளியிட்டு வருகின்றன.
உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி, சரிவிகித உணவு, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை, சிசு உயிரிழப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டு தோறும் பட்டியல் வெளியிடப்படுகிறது. 121 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டது.கடந்த ஆண்டு 106 நாடுகளின் பட்டியலில் 101வது இடத்தில் இருந்தது.
தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து கணக்கிட்டால் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. மேலும், 29 புள்ளி 1 மதிப்பெண்களுடன் இந்தியா தீவிரமானது என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்
இலங்கை 64வது இடத்திலும், நேபாளம் 81வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 84வது இடத்தையும் , பாகிஸ்தான் 99வது இடத்தையும் ஆப்கானிஸ்தான் 109வது இடத்தையும் பிடித்துள்ளன.
5-க்கும் குறைவான மதிப்பெண்களுடன் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட நாடுகள் முதல் 17 இடங்களில் உள்ளன. குழந்தைகள் உயரத்துக்கு ஏற்றார்போல் எடை இல்லாமல் இருக்கும் சைல்ட் வேஸ்டிங்கிலும், இந்தியா 19 புள்ளி 3 மதிப்பெண்கள் பெற்று மோசமான நிலையில் இருக்கிறது. .
எனினும் இந்தியாவில் சிசு மரண விகிதம் 3 புள்ளி 3 சதவீதமாகக் சரிந்துள்ளது.
சர்வதேச பட்டினி குறியீட்டை சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மோடி எப்போது ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, குழந்தைகளின் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகளைக் கவனிப்பார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாகக் கருதப்படுவதாகவும் 121 நாடுகளில் 107 என்பது கிட்டத்தட்ட கடைசி இடம் தானே” என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். 2014ல் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியா இந்தக் குறியீட்டில் பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.