வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலைக் கண்டித்துப் போராட்டம்!
வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலைக் கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் வவுனியா பிரதேச செயலக வாயிலின் முன்பாக இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை காலை இடம்பெற்ற சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பான கூட்டத்தின் போது அங்கு சென்ற பொதுமகன் ஒருவர் தனது சமுர்த்தி முத்திரை வெட்டப்பட்டமை தொடர்பில் குறித்த பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையுடன் இறுதியில் சமுர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதலையும் மேற்கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கந்தபுரம் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் சிவஞானசிங்கம் கபிலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தாக்குதல் மேற்கொண்ட பொதுமகனை வவுனியா – பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்தனர்.
இந்தநிலையில், சமுர்த்தி உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நீதியான தீர்வு கோரி வவுனியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பிரதேச செயலக வாயிலின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் பணிப்புறக்கணிப்பிலும் பிரதேச செயலக ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள், “எமது உத்தியோகத்தர்களை நேர்மையாகக் கடமையாற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள்”, “அரச அதிகாரிகளின் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்”, “அரச சுற்றுநிருபத்துக்கிணங்க பணிபுரிவதற்கு இடமளியுங்கள்” போன்ற வசனங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.