துரந்தோ விரைவு ரயிலுக்குள் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள்…பீகாரில் அதிர்ச்சி சம்பவம்
துரந்தோ விரைவு ரயிலுக்குள் ஆயுதங்களுடன் சுமார் 20 கொள்ளையர்கள் புகுந்து பயணிகளின் உடைமைகளைத் திருடிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. வண்டி எண் 12274 டெல்லி-கொல்கத்தா துரந்தோ விரைவு ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பீகார் மாநிலம் பாட்னாவை தாண்டிய போது சில மர்ம நபர்கள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் துப்பாக்கிகள் ஆயுதங்களை கொண்ட கொள்ளையர்கள் ரயிலுக்குள் அதிரடியாக புகுந்து ஏசி மற்றும் ஸ்லீப்பர் கோச்களில் இருந்த பயணிகளின் உடைமைகளைப் பறித்து சென்றுள்ளனர். பயணிகளின் நகைகள், லக்கேஜுகளை துப்பாக்கி முணையில் வைத்து மிரட்டி கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வேயின் வெப்சைட்டில் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.சிலர் பீகார், ஜார்கண்ட் மாநில ரயில்வே காவல்நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.டஜன் கணக்கில் கொள்ளையர்கள் ரயிலுக்கு துப்பாக்கியுடன் புகுந்து கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி உள்ளிட்ட ஆதாரங்களை கொண்டு அவர்களை நிச்சயம் பிடிப்போம் என பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பீகாரில் “காட்டு ஆட்சி” (Jungle Raj) திரும்பியுள்ளதை உணர்த்துகிறது. சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.