கடவுள் பெயரிலேயே நில அபகரிப்பு நோட்டீஸ்!!
ராஞ்சி: வாழ்க்கையில் எப்போதாவது மனிதர்களுக்கு சோதனைகள் வரும் போது என்ன கடவுளே இப்படி செய்ற என்று சொல்வது வழக்கம்தான். ஆனால், இங்கே, கடவுள் பெயரிலேயே நில அபகரிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சியின் தன்பாத் ரயில் மண்டத்தில் பணியாற்றும் உதவிப் பொறியாளர் ஆனந்த் குமார் பாண்டே, பெகர் பந்த் பகுதியில் உள்ள ரயில்வே ஆக்ரமிப்பு நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு ஹனுமன் கோயிலுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், இப்பகுதியிலிருந்து 10 நாள்களுக்குள் கோயிலை அகற்றாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் வழக்கமான நடவடிக்கைதான் என்றாலும், இந்த நோட்டீஸ் கோயில் வாசலில் ஒட்டப்பட்டிருந்ததும், அதில் நில அபகரிப்பாளர் என்று கடவுள் ஹனுமன் பெயர் இடம்பெற்றிருந்ததும்தான் பலருக்கும் ஆத்திரத்தைக் கிளப்பியது.
அபகரிப்பு நிலத்தை மீட்க எடுத்த முயற்சியில், சக்திவாய்ந்த தெய்வத்துக்கு எதிராக செயல்பட்டுவிட்டதை உணர்ந்தார் பாண்டே. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. கடவுள் பாவம் சும்மா விடுமா என்ன. அவர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இது குறித்து தன்பாத் ரயில்வே நிர்வாகம் கூறுகையில், இது வழக்கமாக செய்யப்படும் பணியிட மாற்றம் நடவடிக்கைதான் என்று பதிலளித்துள்ளது.
அதேவேளையில், கோயில் வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதும், கடவுளையே நில அபகரிப்பாளராகக் குறிப்பிட்டதும் மிகப்பெரிய தவறுதான் என்று ரயில்வே அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுதான் உள்ளனர்.
இந்த கோயிலுடன் சேர்த்து சுமார் 27 குடியிருப்புகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து அறிந்து கொண்ட ரயில்வே நிர்வாகம் உடனடியாக நோட்டீஸை அகற்றியது. இது மனிதத்தவறுதான். மக்களின் நம்பிக்கையில் இடையூறு செய்யும் எந்த எண்ணமும் இல்லை. அபகரிப்பு செய்த நிலங்களை மீட்கவே ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.