டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் – ஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனை குறிப்பிட்டது போல் டிசம்பர் 5ம் தேதி இறக்கவில்லை என்றும் டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாகவும் ஆறுமுசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜெயலலிதா இறந்த தேதியும் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தேதியும் வேறுவேறு என ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ம்தேதி 3.50 மணிக்கு அவரது சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கையில், ஜெயலலிதா இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதும் ஆகும். டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறப்பு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதாவை பராமரித்துகொண்ட பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. டிசம்பர் 4ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாகும்.

மறைந்த முதல்வரின் மருமகன் தீபக் சாட்சியத்தின்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். ஜெயலலிதாவின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில் 04.12.2016 அன்று மதியம் 3 முதல் 3.30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தை கருத்தில் கொண்டு தீபக் முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்தார்’ என கூறப்பட்டுள்ளது.

எனவே, ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதி 3.50 மணிக்கு காலமானார். சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி பயனற்றவை என்பதுடன் அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.