22 ஆவது திருத்தத்துக்கு விக்கி ஆதரவு!
குறைபாடுகள் இருப்பினும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதலடியாக இருக்கும் என்பதனால் 22 ஆவது அரசமைப்பு திருத்தத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 22 ஆவது அரசமைப்பு திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“எவ்வாறான குறைபாடுகள் காணப்பட்டாலும் இந்தச் சட்டமூலம் உண்மையில் சரியான பாதையில் செல்வதற்கான முதலடியாக இருக்கும். இதற்கு எதிராக வாக்களிப்பது இருக்கும் நிலைமையை மேலும் எடுத்துச் செல்வதற்கு காரணமாக இருக்கலாம்.
பிரதிகூலங்கள், அனுகூலங்கள் ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தும் போதே எதிர்பார்த்தமையே. முழு நாடும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதால் அவர் அதற்குப் பொறுப்புப் கூறுபவராக இருக்கின்றார்.
இதில் பிரதிகூலங்களாக இது சர்வாதிகாரப் போக்குக்கு வழிவகுக்கும். அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அதிகார பிரிப்புகள் ஏற்படலாம். நெகிழ்வுத் தன்மை இல்லாது உள்ளது. அதிக செலவு மிக்கதாக உள்ளதுடன், ஊழலுக்கும் வழி வகுக்கலாம்.
இந்தநிலையில் ஜனாதிபதிக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையேயான உறவுகளை முகாமைத்துவப்படுத்தலாம். ஜனாதிபதி வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும், அரசு வேறு கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவதால் இது பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஆதரவுகளைத் திரட்டுவதற்காக ஊழல்களும் இடம்பெறலாம். அதேபோன்று ஜனாதிபதி முறைமை சிறுபான்மையினத்தவர்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி சிறுபான்மையினத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என்று நினைக்கின்றோம்.
வடக்கு, கிழக்குக்கு அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்பட வேண்டும். அனைத்து சமூகங்களும் ஒற்றுமையான இலங்கைக்குள் ஒன்றாக வாழ வேண்டும்.
எங்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தற்போதைய புதிய அரசமைப்புக்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியா இலங்கை மீது கொண்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவது முக்கியமானதாகவுள்ளது.
புதிய அரசமைப்பு ஊடாக தமிழ் மக்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்கூட மறுத்துவிடலாம். இந்த விடயத்தில் இந்தியாவின் சேவை அவசியமாக உள்ளது. எனவே, இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருந்தாலும் ஆதரவாகவே வாக்களிப்பேன்” – என்றார்.