மக்களுக்கு இப்போது கோவிட் சலித்துவிட்டது – சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் கருத்து
மக்களுக்கு இப்போது கோவிட் சலித்துவிட்டது என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் கருத்து.
SII தங்களது 100 மில்லியன் கோவிட் தடுப்பூசி டோஸ்களை அழித்துள்ளனர்.
கோவிட்-19 தடுப்பூசி காலாவதியானதை தொடர்ந்து இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) தங்களது 100 மில்லியன் டோஸ்களை அழித்துள்ளனர்.
சீனாவில் முதலில் பரவ தொடங்கி பின் உலக முழுவதையும் மிகப் பெரிய பொது முடக்கத்திற்குள் தள்ளிய கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியது.
இந்தியா இதுவரை இரண்டு பில்லியனுக்கும் அதிகமான அளவு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதில் இந்தியாவில் வழங்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 90%க்கும் அதிகமாக கோவிஷில்டு தடுப்பூசிகளே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மக்கள் தொகையில் 70% க்கும் அதிகமானோர் குறைந்தது இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2022-ல், இந்தியா சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் பூஸ்டர்களை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால், இந்த பூஸ்டர் டோஸ் வெறும் 298 மில்லியன் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா வியாழக்கிழமை தெரிவித்த தகவலில், குறைந்த தேவை காரணமாக நிறுவனம் கடந்த ஆண்டின் டிசம்பரில் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை நிறுவனம் நிறுத்தியது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு இப்போது கோவிட் சலித்து விட்டதாகத் தோன்றுவதால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு எந்த தேவையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஐயிடம் சுமார் 100 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு கையிருப்பில் உள்ளது, ஆனால் தடுப்பூசிகளின் ஒன்பது மாத ஆயுட்காலம் இந்த ஆண்டு செப்டம்பரில் காலாவதியாகியுள்ளதால் அதனை அழிக்க வேண்டியிருந்தது என ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.