அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை.
அமெரிக்காவில் எந்தவொரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் (2 ஆண்டுகளுக்குபின்) நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். இது இடைக்கால தேர்தல் (‘மிட்டேர்ம் போல்ஸ்’) என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோ பைடன் ஜனாதிபதியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவருடைய பதவிக்காலத்தில் மத்தியில், அடுத்த மாதம் 8-ந் தேதி நாடாளுமன்ற கீழ்சபையில் உள்ள (பிரதிநிதிகள் சபை) மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தல் வெற்றி, 2024-ம் ஆண்டு அங்கு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தக்கட்சி ஜெயிக்கப்போகிறது என்பதற்கு சமிக்ஞையாக அமையும். அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சங்கிலித் தொடர்போல மற்ற விலைவாசிகளும் உயர்ந்துள்ளன.
இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த மாதம் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருட்கள் விலையை குறைப்பதற்காக கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் விடுவிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.