ஜனாதிபதி தேர்தலுக்கு 100 வாரங்கள்! : யாருக்கு என்ன ஆகும்? – அரசியல் அலசல்
கர்தினால் மெல்கம் அவர்கள் , அண்மையில் ஓர் அற்புதமான கருத்தை சொன்னார்.
மக்களின் விருப்பமின்றி பின்வாசல் வழியாக ஜனாதிபதி நீதி வழங்க மாட்டார்.
நாங்கள் புதியதொரு இலங்கையை உருவாக்குவோம்…’
இந்த கர்தினால் அவர்களது கருத்து மட்டுமல்ல முழு உலகமும் சொல்லும் கருத்தும் அதுதான்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சீன ஜனாதிபதி மட்டும் வாழ்த்து தெரிவித்தார்.
பொதுவாக இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு முதலில் வாழ்த்து தெரிவிப்பது இந்தியாதான்.
ஆனால் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ரணிலுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ரணிலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ரணிலுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்தாலும், சீனக் கடனை மறுசீரமைக்க சீனாவிடம் பேசியபோது, வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆணையைப் பெறுங்கள் என்றுதான் சீனாவும் கூறியது.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றுதான்.
இன்னொரு விஷயம், சர்வதேச நாணய நிதியமும் அப்படித்தான். ரணில் ஜனாதிபதியான பின்னர், இலங்கை வந்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் ஊடகவியலாளர் சந்திப்பில், IMF நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு ரணிலுக்கு மக்களின் ஆணை தேவை என தெரிவித்தனர்.
ரணில் அமெரிக்காவுடன் எளிதில் தனது தேவைகளை சமாளிக்கக் கூடிய தலைவர். ரணிலுடன் நெருக்கமான நல்ல உறவு இந்தியாவுக்கும் உண்டு. அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரணிலின் அரசிடம் இருந்துதான் சீனா குத்தகைக்கும் எடுத்தது.
‘அப்படியிருந்தும் இவர்கள் எல்லாம் ஏன் ரணிலிடம் மக்களின் ஆணை முக்கியம் எனக் கேட்கிறார்கள்…?’
ரணிலுக்கு மக்கள் ஆணை கிடைக்காததால்தான் , ஆணை கேட்கப்படுகிறது.
ரணிலுக்கு எம்.பி பதவியை வகிக்கக் கூட ஆணை இல்லை.
2020 பொதுத் தேர்தலில் ரணில் தோல்வியடைந்த வேட்பாளர்.
ஜொன்ஸ்டனுக்கு அமைச்சுப் பதவியை வழங்க ரணில் விரும்பவில்லை, ஆனால் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணிலை விட ஜோன்ஸ்டனுக்கு மக்கள் ஆணை அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 1,99,203 விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்.
ஜே.ஆரினால் , நாட்டின் ஜனாதிபதியை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய வேண்டும் என தீர்மானித்து , அதன் அடிப்படையில் மக்கள் ஆணை இல்லாத ஒருவருக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்படக்கூடாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 1978 அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.
நாட்டைப் பற்றிய முடிவுகளை எடுக்கவும் , நாட்டின் ஜனாதிபதியை நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கவும் , நாட்டின் 50% மக்கள் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தவும் , மக்கள் ஆணையால் (வாக்களித்து) ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.
பின்னர் எப்படி டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியானார்…?’
டி.பி. விஜேதுங்க 1989 பொதுத் தேர்தலில் வேட்பாளராக இருக்கவில்லை.
அவர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்ற ஆளுநர். மக்கள் ஆணையின் பேரில் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற நம்பிக்கையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பிரேமதாசா கேட்டுக் கொண்டார்.
விஜேதுங்க 1989 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று கண்டியில் வென்றார். பின்னர் பிரேமதாச அவரை பிரதமராக்கினார்.
பிரேமதாசவின் மரணத்திற்குப் பின்னர் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்வாக இருந்தபோது, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு எதிராக போட்டியிடாததற்கு முதல் காரணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததே ஆகும்.
இரண்டாவது, விஜேதுங்கவுக்கு ஜனாதிபதியாக வருவதற்கான பொது அவருக்கு ஆணை இருந்தது. மூன்றாவது, அவர் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒரு நபராக இருக்கவில்லை.
ரணில் அனுபவம் வாய்ந்த தலைவராக இருக்க முடியும். அவரது சர்வதேச தொடர்புகள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கலாம். சர்வதேச நாணய நிதியமும் , மொழியும் அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பொதுமக்களின் விருப்பத்தை வென்றிருக்க வேண்டும்.
ராஜபக்சே குடும்பம், ரணிலைப் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ஆக்கியது பொது மக்கள் அவரை விரும்பவில்லை என்ற காரணத்தை வைத்ததாகவே இருக்கலாம்.
ஆனால் அவை சர்வதேசத்திற்கு பொருந்தாது. ஆணையைப் பெறும் அரச தலைவரையே சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராஜபக்சவை வெறுத்தாலும், ராஜபக்சவினர் ஆணை பெற்று அதிபர்களான போது ராஜபக்சவினரை ஏற்கத் தயங்கியதில்லை.
எனவே அப்படிப் பார்க்கும் போது நாட்டிற்கு இன்று தேவைப்படுவது ஜனாதிபதித் தேர்தலே தவிர வேறு எந்த தேர்தலும் அல்ல.
அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது.
ஆனால் 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெற முட்டி மோதி கடுமையாக நின்ற ரணில் , அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும், அரசியலமைப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும்.
ஏன்‘? ரணில் அதை செய்யாது உள்ளார்…?’
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்தால் மொட்டுவின் வேட்பாளராக அங்கத்துவத்தை பெற்று போட்டியிடாவிடில் , தனக்கு கட்டு பணமும் கிடைக்கும் உத்தரவாதம் இல்லை என்பது ரணிலுக்குத் தெரியும்.
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 100 வாரங்கள் உள்ளன.
நவம்பர் 16, 2019 அன்று கோட்டாபய நாட்டின் ஜனாதிபதியானார்.
2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 7, 2019 அன்று அழைக்கப்பட்டன. கோட்டாபயவின் ஜனாதிபதி பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைய இருந்தது.
அதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும். அதாவது ரணிலுக்கு , ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல இன்னும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலமே உள்ளது.
பொதுவாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய வருடம் நாட்டில் வேலை செய்யும் ஆண்டாக இருக்காது. ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டிருக்கும் வருடம் அது. வேட்பாளர் யார் என்பதைக் கண்டறிய இந்த நேரம் செலவிடப்படுகிறது. சிறந்த உதாரணம் மைத்திரிபாலவின் கடந்த 2019ஆம் ஆண்டு. 2018 நவம்பரில் இருந்து நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.
‘மைத்திரி மீண்டும் போட்டியிடுவாரா?’
ஐ.தே.கவில் இருந்து தேர்தலுக்கு வரப் போவது? ரணிலா? அல்லது சஜித்தா? ‘
‘மொட்டு கட்சி மீண்டும் கோட்டாவுக்கு வேட்புமனு கொடுக்குமா…?’
அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரச சேவை மற்றும் அமைச்சுக்களின் பிரதான கடமையாக இருக்கிறது. இந்நேரம் அரசியல் நிரந்ரமின்மை தெரிய வருகிறது. இப்படியான நேரத்தில்தான் நாட்டில் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் அலை தொடங்கியது.
அப்படிப் பார்க்கும் போது 2024 ரணில் நாட்டை ஆட்சி செய்யக் கூடிய ஆண்டல்ல.
கடந்த வருடம் மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு நாட்டை நிர்வகிப்பதே கடினம் ஆனது என்றால், மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியைப் பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லை.
எனவே, ரணில் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, தனக்கு மக்கள் ஆணை இருப்பதை நிரூபிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் மக்கள் ஆணை உள்ள ஒருவரிடம் நாட்டை ஒப்படைத்து விட வேண்டும்.
ரணில் பிரதமராகி இந்த நவம்பர் மாதமாகும் போது 6 மாதங்கள் ஆகின்றன.
கிரீஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில், அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, 6 மாதங்களுக்கு அரசியல்வாதியாக இல்லாத ஐரோப்பிய யூனியனின் துணை ஆளுநனர் ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்து விட்டு , பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்றனர்.
காரணம், கிரேக்கத்தை மீட்பதற்கு IMF மற்றும் , ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த முதல் நிபந்தனை, அரசாங்கம் ஒரு புதிய மக்கள் ஆணையைப் பெற வேண்டும் என்பதுதான்.
இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் IMF சொல்வதும் அதைத்தான்.
ரணில் , பொதுத் தேர்தலுக்கு மட்டுமல்ல , உள்ளூராட்சித் தேர்தலுக்குக் கூட அஞ்சிய நிலையில் , பழைய பேதங்களையும் , வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபடுங்கள் என்கிறார்.
பழைய வேறுபாடுகளை மறந்து ஒன்று சேரும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
அதுதான் கோட்டா ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த சமயம்.
அப்போது, மொட்டு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் , சபாநாயகரும், ரணிலை , பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனர்.
ரணில் ராஜினாமா செய்வதாக உறுதியளித்து விட்டு , ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து பதில் ஜனாதிபதியாக பதவியை பெற்றுக் கொண்டு , அனைத்தையும் சிக்கலாக்கினார்.
இப்போது ரணில் அனைவரையும் ஒன்றிணையுங்கள் என்றாலும் , அவரோடு எவரும் இணைய விரும்பவில்லை.
அப்போது சர்வகட்சி ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அந்த சர்வகட்சி தேர்ந்தெடுத்த ஜனாதிபதியை ஜே.வி.பியால் கூட ஆதரிக்காமல் இருக்க முடியாது.
இதன் காரணமாக ரணிலால் எவரையும் இணைத்துக் கொள்ள முடியாதுள்ளது. குறைந்த பட்சம் மொட்டை கூட ஒற்றுமைப்படுத்தி வைக்க முடியாதுள்ளது. அவ்வாறான நிலையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நாடு நாசமாகாது இருக்க உடனடியாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.
‘ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா …?’
ரணில் போட்டியிடுவதாக இருந்தால், ரணிலுக்கு மொட்டு கட்சி அங்கத்துவத்தில் வேட்புமனு கொடுக்க வேண்டும்.
மொட்டு கட்சி , ரணிலுக்கு ஜனாதிபதி வேட்புமனுவை கொடுக்கும் என நினைக்க முடியாது.
மொட்டு என்பது பசில்.
ரணில் , பசில் பாராளுமன்றத்திற்கு வந்து வாக்கு கேட்பதை தடுத்து , அதிகாரத்தை தனக்குள் கையகப்படுத்தும் வகையில்தான் , மொட்டு வேட்பாளரை தெரிவு செய்யும் 22வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர முயல்கிறார். (இந்த கட்டுரை 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட முடிவு வருவதற்கு முன்னர் எழுதப்பட்டது.) இப்போது 22வது அரசியலமைப்பு திருத்தம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
ஆனால் பசில் விரும்பினால் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு பாராளுமன்றத்திற்கு வரலாம்.
“சரி, ரணில் மொட்டை உடைத்து , யூ.என்.பி.யுடன் கூட்டணியை அமைத்தால்?…”
அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் மொட்டு கட்சியினர் ரணிலுக்குப் பின்னால் வந்தாலும், சிறிசங்கபோ வேடம் போட தயாராகுவர்கள் மட்டுமே ரணிலோடு இணைந்து , தேர்தலில் நின்று வாக்கு கேட்கப் போவார்கள். அதாவது தலையை கொடுக்க நினைக்க வேண்டும்.
சிறிசங்கபோ வேடம் என்பது 1700 வருட வரலாற்று கதை
அன்று ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிய கோட்டாபய (இது பழைய காலத்து கோட்டாபய), அரசன் ஶ்ரீசங்கபோவின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் தருவதாகச் சொல்லி அனுப்பியதோடு, வெகுமதியை எதிர்பார்த்து சிலர் அப்பாவிகளின் தலையை வெட்டி அரசனிடம் கொண்டு சென்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.இறுதியில் மறைந்திருந்த அரசனே , தன் தலையை வெட்டி , தானே வெட்டிக் கொடுத்து , ஏழை வழிப் போக்கன் ஒருவனுக்கு , ஆயிரம் பொற்காசுகளை பெற்றுக் கொள்ளச் சொன்னதுதான் ஶ்ரீசங்கபோ கதை.
2015ல் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சு பதவிகளை எதிர்பார்த்தே மைத்திரிபாலவிடம் போனார்கள்.
ஆனால் அதே மைத்திரி 2019 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயன்ற போது, அவர்கள் அனைவரும் , மைத்திரியால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்து கொண்டு , ஓடி வந்து ராஜபக்சவுடன் இணைந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் போது ரணிலுக்கும் , மைத்திரிக்கு நடந்தது போல நடக்குமா எனத் தெரியவில்லை.
ஏனெனில் இன்று மொட்டு அமைச்சர் பதவியை பெற , ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் வெற்றி பெற்று தாவுவது போல , தேர்தல் நெருங்கும் போது எந்த அணிக்கும் வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தாவக் கூடியவர்களே இங்கு பிறந்தவர்களாக உள்ளனர்.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்