கோவை கார் விபத்து : 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை- டிஜிபி தகவல்!
கோவையில் இன்று அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை உக்கடத்தில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகரில் பாதுகாப்புக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை விரைவுபடுத்துவதற்காக டிஜிபி சைலேந்திர பாபு விரைந்தார். இந்நிலையில், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் சம்பவ இடத்தைப் நேரில் பார்வையிட்டார்.
விபத்து நடந்த இடத்தில் தடயங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் துறையின் மூத்த அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் விளக்கமளித்துள்ளார்.
காரின் பதிவெண் பொள்ளாச்சியை சேர்ந்ததாக இருப்பதால் ,காரை இதற்கு முன்பு வைத்திருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.
விபத்துக்குள்ளான கார் கேஸ் மூலம் இயங்குவதா? அல்லது சிலிண்டர் காரில் இருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 தனிப்படைகள் விசாரித்து வருகிறது என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.
வண்டியில் இரண்டு சிலிண்டர் இருந்துள்ளது. அதில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது என்று கண்டறிந்துள்ளனர். உயிரிழந்த நபர் குறித்தும், சிலிண்டர் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.