வங்காளதேசம்- நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது.

முதல் சுற்றில் பெற்ற 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள நெதர்லாந்து அணி, சூப்பர்12 சுற்றிலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 3 முறை நேருக்கு மோதியுள்ளன. இதில் 2-ல் வங்காளதேசமும், ஒன்றில் நெதர்லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்டம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:நாடு மீண்டெழ அனைவரும் கைகோர்ப்போம் ஜனாதிபதி வாழ்த்துச்செய்தி.

இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளான பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயுடன் (குரூப்2) மோதுகிறது. முதல் ரவுண்டில் நன்றாக ஆடிய ஜிம்பாப்வே அணி நிச்சயம் தென்ஆப்பிரிக்க அணிக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் திறமையை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மை காலமாக ரன் எடுக்க முடியாமல் தடுமாறும் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயிடம் ஒரு போதும் தோற்றதில்லை. இதற்கு முன்பு மோதியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அந்த பெருமையை தக்க வைக்கும் உத்வேகத்துடன் உள்ள தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறுகையில் ‘ போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். எந்த வகையிலும் ஜிம்பாப்வேயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்’ என்று குறிப்பிட்டார். இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.