ஆணுக்கு சம உரிமை கேட்டு போராடிய சுவிஸ்காரர் : சண் தவராஜா
ஆண்களுக்குச் சமமாக உரிமை பெற்ற சமூகமாக வாழ பெண்கள் போராட வேண்டிய நிலையே நடப்பு உலகில் இன்னமும் நீடிக்கின்றது.
பல துறைகளில் பெண்கள் முன்னேறி இருந்தாலும் ஆண்களுக்குச் சமமாக அவர்களால் ஆதிக்கம் மிக்கவர்களாக இன்னமும் மாற முடியவில்லை. ஏனெனில் இன்றைய உலகு ஆண்களால் ஆண்களுக்காகவே உருவாக்கப் பட்டிருக்கின்றது.
மனித குல வரலாற்றில் இடைக் காலத்திலேயே இத்தகைய நிலை உருவாகிய போதிலும், இன்றுவரை அந்த நிலை நீடிக்கவே செய்கின்றது. பெண்ணும் ஆணும் இணைந்ததே உலகம் என்ற போதிலும், பெண்களை ஒதுக்கி வைக்கும், இரண்டாம் தரத்தில் வைக்கும் ஆண் மையச் சிந்தனையை மாற்றியமைக்க பெண்கள் அதிகம் போராட வேண்டியிருந்தது. பெண்கள் முன்னெடுத்த, தற்போதும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற அத்தகைய போராட்டங்களில், பெண்களைச் சமமாக மதிக்கின்ற ஆண்களும் பங்காளிகளாக உள்ளனர் என்பது மகிழ்வுக்குரிய தகவல்.
என்னதான் ஆண்கள் தங்களுக்கான உலகத்தை உருவாக்கி வைத்திருந்தாலும், தமது வசதிக்கு ஏற்ப சட்ட திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தாலும் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதைப் போல சில விடயங்கள் நடந்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அத்தகைய ஒரு விடயமே இன்றைய கட்டுரையின் உள்ளடக்கமாக உள்ளது.
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்திருந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 11ஆம் திகதி வெளியாகி இருந்தது.
சுவிஸ் நாட்டின் அப்பன்செல் அவுசர்ஹோர்டன் மாநிலத்தைச் சேர்ந்த மக்ஸ் பீலர் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
விபத்தொன்றில் தனது மனைவியை இழந்த அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியப் பணம் அவரது கடைசி மகளுக்குப் 18 வயது நிரம்பிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
சுவிஸ் நாட்டு ஓய்வூதியச் சட்டத்தின் பிரகாரம் திருமணமான பெண்ணொருவரின் கணவர் இறந்தால், கணவரது ஓய்வூதியம் அவரது வாழ்க்கைக் காலம் முழுமைக்கும் – அவருக்குப் பிள்ளைகள் இருந்தாலும் இல்லாது விட்டாலும் – முழுமையாக வழங்கப்படும்.
ஆனால், மனைவி இறக்கும் பட்சத்தில் கணவனுக்கான ஓய்வூதியம் அவரது கடைசிப் பிள்ளைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரையே வழங்கப்படும்.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டில் வீலரின் இரண்டாவது மகள் 18 வயதை எட்டியதும் அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
காப்புறுதி முகவராகப் பணியாற்றி வந்த வீலர், நீண்டகாலமாகப் பணியில் இல்லாது இருந்த நிலையில் அவரால் அதே வேலையைத் தொடர்ந்து செய்வது அல்லது அத்தகைய ஒரு வேலையைத் தேடிக் கொள்வது என்பது சிரமமான காரியம். அது மாத்திரமன்றி 57 வயதில் ஒரு புதிய வேலையைத் தேடிக் கொள்வது என்பதுவும் இலகுவான காரியமல்ல. தனது நிலையைத் தெளிவு படுத்தும் கடிதமொன்றை வரைந்த வீலர் அதனை ஓய்வூதியக் காரியாலயத்துக்கு 2006ஆம் ஆண்டு அனுப்பி வைத்திருந்தார். எனினும், அவரின் கோரிக்கை சமஷ்டி நாடாளுமன்றினால் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அவரது மேன்முறையீடும் கண்டு கொள்ளப்படவில்லை.
இதனையடுத்து, அவர் நீதிமன்றின் தலையீட்டைக் கோரினார் சுவிஸ் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் (சரத்து 8, பந்தி 3) ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. எனினும், ஓய்வூதிய விடயத்தில் தனக்குப் பாரபட்சம் காட்டப்படுகின்றது என்பது அவரது வாதமாக இருந்தது. அவரது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் 2011ஆம் ஆண்டில் அவர் மாநில உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவர் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அவர் 2012இல் பிரான்ஸ் நாட்டின் ஸ்ராஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றை நாடினார்.
அவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வீலரின் வாதத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டனர். ஒருவர் ஆணாய்ப் பிறந்ததற்காக அவருக்குப் பாரபட்சம் காட்டுவது நியாயமாகாது என்ற தீர்ப்பை அந்த நீதிமன்றம் வழங்கியது.
8 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக சுவிஸ் அரசாங்கம் மேன்முறையீடு செய்தது. இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. அமர்வில் இருந்த நீதிபதிகள் 12:5 என்ற விகிதத்தில் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தனர்.
2006ஆம் ஆண்டு முதல் தனியொருவனாக மெக்ஸ் பீலர் மேற்கொண்டு வந்த பல்வேறு முயற்சிகள், சட்டப் போராட்டங்கள் என்பவற்றின் பின்னர் இறுதியாக அவருக்கு கடந்த அக்டோபர் 11ஆம் திகதி நீதி கிடைத்தது.
தற்போது கிடைத்துள்ள தீர்ப்பின் பிரகாரம் நிலுவையாக உள்ள ஓய்வூதியப் பணம் முழுவதுமாக வீலருக்குக் கிடைக்க உள்ளது. அது மாத்திரமன்றி இதுபோன்று ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போருக்கும் நிலுவையாக உள்ள ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டொன்றுக்கு 12 மில்லியன் பிராங் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சமாந்தரமாக, தற்போது அமுலில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான சட்டத்தை மாற்ற வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. இவ்வாறு சட்டம் மாற்றப்படும் போது புதிதாக விண்ணப்பிக்கும் மனைவியை இழந்த ஆண்களுக்கும் ஓய்வூதியத்தை வழங்கியாக வேண்டும். இதற்குத் தேவையான நிதி வளத்தையும் அரசாங்கம் கண்டறிந்தாக வேண்டும்.
இதேவேளை, ஓய்வூதியம் தொடர்பிலான மற்றோரு சுற்று விவாதம் சுவிஸ் மக்கள் மத்தியில் ஆரம்பமாகியுள்ளது. மறுபுறம், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தொடர்பான கருத்தாடல்களும் ஆரம்பமாகியுள்ளன.
27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் சுவிஸ் ஒரு அங்கத்துவ நாடாக இல்லாத போதிலும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றை ஏற்றுக் கொண்ட, அது தொடர்பான பட்டயத்தில் கையொப்பம் இட்ட ஒரு நாடாக சுவிஸ் உள்ளது.
இந்த நீதிமன்று தொடர்பான பட்டயத்தில் மொத்தம் 46 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாமானியர் ஒருவர் மேற்கொண்டுவந்த இடையறாத போராட்டம் இறுதியில் ஒரு நாட்டின் சட்டத்தையே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆளும் வர்க்கத்தின் நலன் பேணும் அடிப்படையிலேயே நீதித்துறை உலகம் முழுவதிலும் இயங்கி வந்தாலும், அவ்வப்போது இப்படியான தீர்ப்புகளை வழங்கி சமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்ற எண்ணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் செய்கிறது.