முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்கிறது தொல்லியல் திணைக்களத்தின் அடாவடி!
தொல்லியல் திணைக்களத்தினர் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை விட பௌத்த மத விகாரையை அமைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை விடயத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாகப் பூர்வீக ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை அபகரிக்கும் நோக்கோடு அல்லது பௌத்தத்தைத் திணிக்கும் நோக்கோடு பலருடைய செயற்பாடும் காணப்படுகின்றது.
தொல்லியல் திணைக்களம் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை விட பௌத்த மத விகாரையை அமைக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருப்பதாகத் தெரிகின்றது. அதனைவிட பிக்குகள் அதிகமாக வந்து தங்களுடைய மதத்தைத் திணிக்கும் நோக்கமாகவே காணப்படுகின்றது.
அதனைவிட முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறம் தள்ளி பௌத்த மத திணிப்புக்கு ஆதரவாகச் செயற்படும் நிலைதான் காணப்படுகின்றது. சைவ மத வழிபாடுகளை முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் நோக்கத்தோடு அவர்கள் செயற்படுகின்றார்கள்.
நேற்று (27) எங்களால் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
நான்கு வழக்குகள் குருந்தூர்மலைக்காக எங்கள் மீது போடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.
இதனைவிட குருந்தூர்மலை விடயம் தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி நேரடி விஜயம் செய்யவுள்ளார் எனவும், இரு பகுதியினரையும் அழைத்து அது தொடர்பான விளக்கங்களையும் கோரவுள்ளார் எனவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது.
இதிலே ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை பகுதியானது கிட்டத்தட்ட 13 கிராம மக்களுக்கு ஏற்கனவே அந்த நிலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. தண்ணிமுறிப்பு, குமுழமுனை கிராமங்கள் மட்டுமல்ல வட்டுவாகல் வரையும் அந்த நிலங்கள் சொந்தமாக இருக்கின்றன. இந்த மக்களுக்குக் காணிகள் மட்டுமல்ல குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இவ்வாறு பூர்வீக சொத்துக்கள் அம் மக்களின் சொத்துக்கள்.
இன்று ஆதிசிவன் ஐயனார் ஆலயம் இருந்த இடத்தை முற்றுமுழுதாக அழித்து தொல்லியல் ஆய்வுக்கென வந்தவர்கள் ஆய்வுகளைப் பார்க்கிறார்களோ, இல்லையோ, ஆனால் பௌத்த மத விகாரையை அமைக்கும் பணியை வேகமாகச் செய்கின்றார்கள்.
நீதிமன்றத் தீர்ப்பானது கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்; அதற்கு மேல் ஒன்றும் கட்டக்கூடாது என்று வழங்கப்பட்ட நிலையில் கூட இதனை அத்துமீறிய செயற்பாடாகவே இருக்கின்றது. இதனைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற பொலிஸார் இதற்கு ஒத்துச் செல்பவர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவுமே காணப்படுகின்றார்கள்.
இங்கே வர இருக்கும் அமைச்சர்கள் சரியான முறையிலே ஆய்வுகள், அறிக்கைகள், ஏற்கனவே உள்ள எங்களது வழிபாட்டுத் தலங்கள் என்பவற்றைச் சரியான முறையில் ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு அரசினுடைய அமைச்சர்களாக வருபவர்கள் பிழையான விடயங்களில் ஈடுபடக்கூடாது என்றும் வேண்டிக்கொள்கின்றேன்.
எங்களுடைய பூர்வீகம், கோரிக்கை நியாயமானது. சரியான முறையில் ஆய்வுகளை மேற்கொள்வார்களாக இருந்தால் எங்களுக்குச் சாதகமாகவே அமையும்” – என்றார்.