போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 வயது மாணவன் ஆபத்தான நிலையில் ….. (Video)
மாத்தறை திஹகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 14 வயது பள்ளி மாணவன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவில் உடையில் வந்த போலீஸ் அதிகாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
மாத்தறை திஹகொட நாயிம்பல பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஐந்து சிறுவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மாத்தறை நாயிம்பல மகா வித்தியாலயத்தின் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஹரேஷ் ஹங்சக தேஷான் என்ற மாணவனே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவத்தின் போது, குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் ஒருவர், சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே துப்பாக்கியால் சூட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நாம் வினவிய போது, கைது நடவடிக்கையொன்றின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் துப்பாக்கி வெடித்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் இதன்போது கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இச்சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மாத்தறை போலீஸ் நிலையத்துக்கு முன்பாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் , தாங்கள் பெரகராவுக்கு மயில் இறகுகளை எடுத்து வரும்போது சிவில் உடையில் இருந்த கமகே என்ற போலீஸ் அதிகாரி 10ம் வகுப்பு மாணவன் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டதாக தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் சொல்வது கீழ்வரும் வீடியோவில் உள்ளது.