’22’ திருத்தச் சட்டத்தால் எதைச் சாதிக்கப் போகின்றீர்கள்? – மஹிந்த கேள்வி.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் நான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி தொடுப்பவர்கள் அந்தத் திருத்தச் சட்டத்தால் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பதைப் பகிரங்கமாகக் கூறவேண்டும்.
22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது. அனைவரும் ஓரணியில் சங்கமித்தால்தான் நாடு மீளெழுச்சி பெறும்
புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்கு முன்னர் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சகலரும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.