பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றோம்! – மஹிந்த தெரிவிப்பு.
“நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கொரோனாப் பெருந்தொற்றே பிரதான காரணம். இதைப் புரிந்தும் புரியாதவர்கள்போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித் திரிகின்றார்கள்.
நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர்.
ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தலைமை தாங்கக்கூடிய – வல்லமை பொருந்திய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவரும் நாங்களும் இணைந்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்போம். இதற்குக் கட்சி, பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.