10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியில் மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி
10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வருவதாக குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:
பல்வேறு நிலைகளில் உள்ள வெவ்வேறு பணியிடங்களுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். குஜராத் மாநிலம் விரைவாக முன்னேறி வருதாகவும், குஜராத் பஞ்சாயத்து சேவை வாரியத்தில் இருந்து 5000 பேருக்கும், குஜராத் துணை ஆய்வாளர் நியமன வாரியம் மற்றும் லோக்ரக்ஷக் நியமன வாரியத்தில் இருந்து 8000 பேருக்கும் பணி நியமன கடிதங்கள் அளிக்கப்படுவதாகவும், துரித நடவடிக்கையை மேற்கொண்ட குஜராத் முதல்வர் மற்றும் அவரது குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார் பிரதமர்.
அண்மை காலங்களில் குஜராத் மாநிலத்தில் 10,000 இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதோடு அடுத்த ஓராண்டில் 35,000 இடங்களை நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
குஜராத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாவதற்கு மாநிலத்தின் புதிய தொழில்துறை கொள்கை தான் முக்கிய காரணம். ஓஜாஸ் போன்ற டிஜிட்டல் தளங்களையும், குரூப் 3 மற்றும் 4-ஆம் நிலை இடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை நீக்கப்பட்டிருப்பதை பாராட்டிய மோடி, “அனுபந்தம்” செல்பேசி செயலி மற்றும் வேலைவாய்ப்பு இணையதளம் முதலியவற்றின் வாயிலாக மாநிலத்தில் வேலை தேடுபவர்களும், பணியமர்த்தும் நிறுவனங்களும் சுமூகமாக இணைக்கப்படுகின்றன. அதேபோல குஜராத் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விரைவான பணி நியமன மாதிரி தேசிய அளவில் பாராட்டப்படுகிறது.
மேலும், இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் மாதங்களில் தேசிய மற்றும் மாநில அளவுகளில் தொடர்ந்து நடத்தப்படும். 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மத்திய அரசு பணியாற்றி வரும் வேளையில், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்தப் பிரசாரத்தில் இணைந்து செயல்படுவதன் மூலம் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயரும். “கடை கோடியில் உள்ளவரையும் அரசின் திட்டங்களின் பலன்கள் முழுமையாக கிடைப்பதையும் இது உறுதி செய்யும்.”
2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக முன்னேறும் இந்தியாவின் உறுதிபாட்டில் இளைஞர்களின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டியவர், சமூகத்திற்கும், நாட்டிற்குமான தங்களது கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
வேலை கிடைப்பதை தங்கள் முன்னேற்றத்தின் இலக்காகக் கொண்டிராமல் இளைஞர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டு, திறயை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். “இதன் மூலம் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
உங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் நீங்கள் செய்யும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளிக்கும், மேலும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பல கதவுகள் திறக்கப்படும்” என்றார் பிரதமர் மோடி.