சுமந்திரனின் தன்னிச்சையான முடிவால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு.
“சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது தனிப்பட்ட கம்பனி அல்ல. மக்களுடைய கட்சி. மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியான முடிவாக இருக்கும்.
ஆனால், சுமந்திரனுடைய கருத்துக்கள் இப்போது தன்னிச்சையாக அமைகின்றது. அது கட்சி முடிவு அல்ல.
இவ்வாறான முடிவு கட்சிக்கு மட்டும் பாதிப்பு அல்ல. தமிழ் மக்களுக்கும் மண்ணுக்கும் நமது நிலத்துக்கும் மொழிக்கும் இது பாதிப்பு.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அண்மையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது சுமந்திரன் வாக்களிக்காமல் சபையிலிருந்து வெளியேறி சென்று விட்டார். இந்த முடிவு கட்சியில் எப்போது எடுக்கப்பட்டது? அவரே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஜனாதிபதிக்கான தெரிவு நாடாளுமன்றில் இடம்பெறும்போது வாக்களிப்பில் நடுநிலை வகிப்பது முதுகெலும்பு இல்லாதவர்களின் செயல் என்று சுமந்திரன் கூறினார். அவ்வாறு கூறியவர் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வாக்களிப்பைப் புறக்கணித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்ப்பதற்காகவே சுமந்திரன் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வாக்களிப்பைப் புறக்கணித்தார்.
சம்பந்தன் எப்போது விலகுவார், அந்தக் கதிரையை பிடிப்போம் என்று பலர் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். நான் அவ்வாறு இல்லை. கட்சிக்குள் கொள்கைகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறுமாக இருந்தால், நான் கட்சியை விட்டு வெளியேறுவேன்.
கட்சித் தலைமை சரியான தீர்மானங்களை எடுக்காவிட்டால், இவ்வாறு பலர் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, கட்சியையும், மக்களையும் திசை திருப்பி விடுவார்கள்.
கட்சியில் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்தக் கூட்டுப் பொறுப்பின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுகளால்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கடந்த பல ஆண்டுகளாகக் கூறிக் கொண்டு வருகின்றேன்.
இது தனிப்பட்ட கட்சி அல்ல. இது மக்களுடைய கட்சி. இது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அந்தக் கட்சியினுடைய அங்கத்தவர்கள் யாராக இருந்தாலும் சரி கட்சித் தலைமையை மதிக்க வேண்டும்.
இந்த மண்ணுக்கும் என்னுடைய தாய்மொழிக்கும் என்னால் செய்யக்கூடிய சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே தவிர வேறெந்த நோக்கமும் தனிப்பட்ட இலாபமும் எனக்குக் கிடையாது.
என்னுடைய சொத்துக்களை கௌரி சங்கரி தவராசா எனும் அறக் கட்டளை மூலம் மக்களுக்காக வழங்கப்போகின்றேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசியப்பட்டியல் தருமாறு நான் கேட்கவில்லை. ஆனால், தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டேன். தேசியப்பட்டியலில் எனது பெயர் முதலாவதாகக் காணப்பட்டது. எனினும், அடுத்த நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகத்தை அழைத்து, அம்பிகா சற்குணநாதனுடைய பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட்டுள்ளது என அறிவித்தார்.
பின்னர் சுமந்திரன், சம்பந்தனைச் சந்தித்து ஒரு முடிவு எடுத்து தேசியப்பட்டியல் அம்பாறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தவராசா கலையரசனுக்குக் கொடுப்பதாக தீர்மானித்து அதனையும் ஊடகங்களை அழைத்து அறிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்பதில் சுமந்திரன் தீவிரமாக இருந்தார். ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமிழ்த் தேசிய உணர்வுள்ள ஒருவர் தலைவராக வர வேண்டும்” – என்றார்.