யுபிஐ பரிவா்த்தனை 730 கோடியாக அதிகரிப்பு
கடந்த அக்டோபா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 730 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தைவிட 7.7 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பா் மாதத்தைக் காட்டிலும் 7.7 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
அதேவேளையில், கடந்த செப்டம்பர் மாதம் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான 678 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதவிர, கடந்த அக்டோபர் மாதம் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவா்த்தனைகள் 48.25 கோடியாக இருந்தது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.4.66 லட்சம் கோடி. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் 46.27 கோடியாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 46.69 கோடியாகவும் இருந்தது.
மேலும், ஃபாஸ்ட்டேக் மூலம் செய்யப்படும் சுங்கக் கட்டண வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.4,451.87 கோடியாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் ரூ.4,244.76 கோடியாக இருந்தது.