அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வழங்கி நாட்டைக் கட்டியெழுப்பச் சந்தர்ப்பம்! – நழுவ விடாதீர்கள்?

“நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது. எனவே, தோல்வியுற்ற இனவாத சிந்தனைக்குள் தொடர்ந்தும் மூழ்கியிருக்காமல், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதனூடாகவும், காத்திரமான அதிகாரப்பகிர்வினூடாகவும் வலுவான புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை தென்னிலங்கை அரசியல் சமூகம் நழுவ விடாமல் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன்.
அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ‘தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு தயாராக உள்ளது. தமிழ்த் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சுரேஷ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இவ்விடயம் தொடர்பாக உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் பேசவிருப்பதாகவும் இதனைத் தமிழர் தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இதனைப் போலவே, புதுடில்லியில் இருக்கக்கூடிய இலங்கைத் தூதுவரான மிலிந்த மொரகொட வும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண புதிய அணுகுமுறை, புதிய பேச்சுகள் தேவை எனக் கூறியுள்ளார்.
இவர்கள் இருவருமே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல்கொடுத்து வருபவர்கள். மாகாண சபை முறைமை என்பது வெள்ளை யானை என்றும், அது இலங்கைக்குத் தேவையற்ற ஒன்று என்றும் இவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
இவர்களது புதிய அணுகுமுறை, புதிய பேச்சு என்பது பதின்மூன்றாவதையும் இல்லாமல் செய்வதற்கான முயற்சியா? அல்லது அதற்கு மேல்சென்று தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒருவழிமுறையா? என்ற கேள்வி எழுகின்றது.
நல்லாட்சி அரசு ஆட்சியில் இருந்தபோது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் சில விடயங்களும் உள்ளடக்கப்பட்டன. அன்றைய அரசில் இதற்கான வழிநடத்தல் குழுவொன்றும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு 83 முறை கூடியும் எத்தகைய முடிவையும் எட்டாமல் வெறும் காலம்கடத்தும் செயற்பாடாக அமைந்தது மட்டுமன்றி, அந்த முயற்சி குப்பைக்கூடைக்குள் போடப்பட்டது.
இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதிலிருந்து வெளியேறியிருக்கும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதம மந்திரி பதவி வகிக்கின்ற தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும், தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்கள்.
தாங்கள் சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வென்றதாகவும், எனவே தாங்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்து வருபவர்கள்.
ரணில் விக்கிரமசிங்கவோ பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ஜனாபதி பதவியை வகிக்கின்றவர். தனது ஆட்சிக்காலத்திலேயே ஒரு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முடியாத ஒருவர் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இனவாதிகளைக் கொண்டிருக்கும் இந்த அரசில் புதிய அரசியல் சாசனத்தை இவரால் கொண்டுவரமுடியுமா? அதற்கு இந்த இனவாத சக்திகள் இடம்கொடுக்குமா? எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களை இன்னுமொருமுறை ஏமாற்றுவதற்கான முயற்சிகளின் ஆரம்பகட்டமே இந்த நாடகம்.
இத்தகைய நாடகங்களை ஏற்கனவே பலமுறை தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். உண்மையாகவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இந்த நாடு பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முக்கியமான ஒருவிடயமாகும். உலக நாடுகள் பலவும் இலங்கை அரசுக்கு அவ்விதமான ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். ஆகவே நீங்கள் கூறிக்கொள்வதுபோல இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்களாக இருந்தால், இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஓரளவேனும் காப்பாற்ற விரும்பினால், இந்த நாட்டின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என நீங்கள் கருதினால், பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உங்களது தீர்வுகள் அமைய வேண்டும்.
நீங்கள், “பேச்சுக்குத் தயார் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறுவதை விடுத்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைப்பதனூடாக மாத்திரம்தான் பேச்சுகளை ஆரம்பிக்க முடியும்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தே தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அதனை நீங்கள் ஏற்காமல் எம்மை ஆயுத முனையில் அடக்க நினைத்ததன் விளைவாக தமிழ்ச் சமூகம் தனிநாட்டுக்காகப் போராடியது.
2009இல் அந்தப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னரும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான உங்களது அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இப்போது அனைத்து தமிழ்த் தலைமைகளும் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு கோரி நிற்கின்றனர். எனவே தமிழ்த் தரப்பு தனக்கு என்ன தேவை என்பதை தெளிவாக முன்வைத்துள்ளனர். இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்துவதே இப்பொழுதைய தேவை.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது. எனவே, தோல்வியுற்ற இனவாத சிந்தனைக்குள் தொடர்ந்தும் மூழ்கியிருக்காமல், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதனூடாகவும், காத்திரமான அதிகாரப்பகிர்வினூடாகவும் வலுவான புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் இலங்கையை முன்னேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை தென்னிலங்கை அரசியல் சமூகம் நழுவ விடாமல் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
“இந்தியாவும் இலங்கையும் நாணயத்தின் இருபக்கங்கள்” என்னும் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்கவின் அண்மைக்கால கருத்து உண்மையாக இருக்குமானால், முதற்கட்டமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான மாகாண சபை முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வருவதுடன், இலங்கை மண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் சக்திகளுக்கு வழங்காமல் இருப்பதும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” – என்றுள்ளது.