அம்பன் புயல் நஷ்டஈடு இன்னமும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை – சுமந்திரன் கவலை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அம்பன் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட விவசாய அழிவிற்கான இழப்பீடு வழங்கப்படும் என 4 மாதமாக ஏமாற்றப்படுவதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
வடக்கு மாகாணத்தில் கடந்ந ஏப்ரல் மாதம் இறுதிப் பகுதியில் அம்பன் புயலின் தாக்கத்தினால் சுமார் 36 மில்லியன் ரூபா பெறுமதியிலான வாழைகள் ,தென்னைகள் , பப்பாசி என்பன பல விவசாயப் பயிர்கள் அழிவடைந்ததாக மாவட்டச் செயலகம் கணக்கிட்டு அணர்த்த முகாத்துவ அமைச்சிற்கு சமரப்பித்து இதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படும் என ஓரு அமைச்சரும் தெரிவித்தார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டபோதும் அணர்த்த முகாமைத்துவ அமைச்சோ வீடுகள் , உடமைகள் சேதங்களிற்கான இழப்பீடே எம்மால் வழங்கப்படும் இதனை மகாவலி விவசாய அமைச்சிற்கு சமர்ப்பியுங்கள் எனந் திருப்பி அனுப்பினர். இதனால் ஒரு மாதம் வீனாகியது. அவ்வாறு அணர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் மகாவலி அபிவிருத்தி விவசாய அமைச்சிற்கு அனுப்பி அமைச்ச்வை ஒப்புதலை பெற முயற்சிகள் இடம்பெற்றன.
அந்த அமைச்சும் ஆராய்ந்து இதற்கான ஒதுக்கீடு தமக்கான அமைச்சிலும் இல்லை எனக் கையை விரித்தனர். இரண்டாவது மாதமும் வீணாகியது. இருந்தபோதும் இழப்பீடு மட்டும் விவசாயிகளிற்கு கிட்டவே இல்லை. இதனால் பின்னர் தேர்தல் காலம் என்பதனால் ஓர் அமைச்சர் அதனை அமைச்சரவையில் கேள்வி எழுப்பினார். இவ்வாறு கேள்வி எழுப்பிய அமைச்சரையே இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு கூறினர்.
அமைச்சரும் பத்திரத்தை தயார் செய்து அதனை மொழி பெயர்த்து 55 பிரதியும் எடுத்து அமைச்சரவை அலுவலகத்திற்கு சமர்ப்பித்தார். இறுதி அமைச்சரவையிலேனும் எடுத்துக்கொள்ளப்படும் என விவசாயிகள் நம்பினர். அதுகும் ஏமாற்றத்திலேயே முடிந்து விட்டது. ஏனெனில் அமைச்சரவை அனுமதி அல்ல குறித்த விடயம் அமைச்சரவையில் ஆராய்விற்குகூட எடுத்துக்கொள்ளப் படவேயில்லை .
தற்போது புது அமைச்சரவை அதன் இரண்டு கூட்டத்தை நடாத்தி மூன்றாவது கூட்டமும் கூட உள்ளது. இந்தக் கூட்ட நிகழ்ச்சி நிரலிலும் இந்த விடயம் இருப்பதாக தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கு அதனை இந்த அரசு வழங்கி ஏழை விவசாயிகளின் வாழ்வாதரத்தில் கவனம் செலுத்துமா என்பதே தற்போதைய கேள்விக்குறியாகவுள்ளதனால் அடுத்து வரும் அமைச்சரவையில் ஏனும் அனுமதி பெற்று இதனை வழங்க முன்வர வேண்டும்,என்றார்.